கொரோனா குறைந்து வருவதாகவோ நினைத்துக் கொண்டு கட்டுப்பாடின்றி மக்கள் நடமாடத் தொடங்கினால், அது சென்னையில் கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அளவிலும், சென்னையிலும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் இது கொண்டாடுவதற்கான தருணமல்ல. கொரோனா ஒழிப்பில் இது மிகச்சிறிய முன்னேற்றம்தான் என்பதை மனதில் கொண்டு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டும்தான் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற முடியும்.
சென்னையில் தினமும் ஏற்படும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த ஜுன் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி 964 என்ற அளவில் இருந்தது. அன்றைய நிலையில் இது பெரிய எண்ணிக்கை. ஆனால், ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி சென்னையில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து 2182 என்ற உச்ச அளவுகளில் ஒன்றை அடைந்தது. அதுமட்டுமல்ல, சென்னையில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஜூன் 1-ம் தேதியின் அளவான 15,770 என்ற அளவிலிருந்து 4 மடங்கு அதிகரித்து ஜூலை 1-ம் தேதி 60,533ஆக இருந்தது. மே மாதத் தொடக்கத்திலிருந்து சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து நேற்றைய நிலவரப்படி தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 1713 ஆக இருப்பது அனைவருக்கும் நிம்மதி அளித்துள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அளவு சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிக, மிக முக்கியமானது கடந்த 15 நாட்களாக சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த முழு ஊரடங்கு ஆகும். இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் வேளையில், சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் மே 3ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக கடைபிடிக்காததுதான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் கொரோனா உச்சக்கட்டத்தை அடைந்ததற்கும் ஜூன் மாதம் முதல் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு விதிகளை பெரும்பான்மை மக்கள் கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சென்னையில் கடந்த 15 நாட்களாக நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கு நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டு, இன்று முதல் வழக்கமான ஊரடங்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, இருந்த ஊரடங்கின் பயனாக அடுத்த ஒரு வாரத்திற்கு கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டுதான் இருக்கும். இதை கொரோனா ஒழிப்பில் கிடைத்த வெற்றியாகவோ அல்லது கொரோனா குறைந்து வருவதாகவோ நினைத்துக் கொண்டு கட்டுப்பாடின்றி மக்கள் நடமாடத் தொடங்கினால், அது சென்னையில் கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவுவதற்கு வழி வகுத்துவிடும்.
சென்னையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் கொரோனா வைரசை எப்போதோ முழுமையாக விரட்டியிருக்க முடியும். ஆனால், கட்டுப்பாடுகள் நிறைந்த முதல் இரு கட்ட ஊரடங்குகளைத் தொடர்ந்து மூன்றாவது கட்ட ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது, அவற்றை நமக்கு கிடைத்த வெற்றியாக கருதி, கொண்டாட்டங்களை நடத்தியதும், இனி கொரோனாவால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்ற தவறான நம்பிக்கையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டதுதான் நிலைமையை இந்த அளவுக்கு நிலைமையை மோசமாக்கி விட்டது. இந்த தவற்றிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்த போது, அந்த நாடுகளைப் பார்த்து நாம் பரிதாபப்பட்டோம். ஆனால், அந்த நாடுகள் ஒரு சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தின. கடைகள் திறக்கப்பட்டன; மக்கள் சுதந்திரமாக நடமாடினார்கள்; அலுவலகங்களும், பொதுப் போக்குவரத்தும் இயங்கின. ஆனாலும், அங்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை; படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் சில நூறு புதிய தொற்றுகள் மட்டுமே ஏற்பட்டு வருகின்றன.
இதற்கு காரணம்.... அந்த நாடுகளில் உள்ள மக்கள் பொது இடங்களில் தொடங்கி, அலுவலகங்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள் என அனைத்திலும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்; முகக் கவசம் அணியத் தவறியதே இல்லை; கைகளை கழுவுவதை கடமையாக்கிக் கொண்டனர். அதுதான் அவர்களின் வெற்றியின் ரகசியம் ஆகும்; நமது தோல்வியின் ரகசியம் என்பது அவர்கள் செய்தவற்றை எல்லாம் செய்யத் தவறியது ஆகும். இந்தியாவின் நிலையை இதைவிட எளிதாக விளக்க முடியாது.
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது; பிற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. ஆனாலும் நிலைமை இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டியது ஒரே வழிமுறைகளைத்தான். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் செல்வதை முடிந்தவரைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்; முகக் கவசத்தையும், கையுறைகளையும் தவறாமல் அணியுங்கள்; சோப்பு நீரால் கைகளை 20 வினாடிகள் கழுவுங்கள்.
முகக்கவசம் அணியாக வாடிக்கையாளர்களை கடையில் நுழைய வணிகர்கள் அனுமதிக்கக் கூடாது; முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்த வேண்டும். கடைகளில் வணிகர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், முகக்கவசம் அணியும்படி கட்டாயப்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் கடைகளுக்கு வர மாட்டோம், நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் புகார் அளிப்போம் என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்க வேண்டும். இந்த எளிமையான விதிகளை அனைவரும் கடைபிடித்து கொரோனாவை வீழ்த்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.