கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை; மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் வேகம் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது அனைவர் மனதிலும் பதற்றம் பரவுவதை தவிர்க்க முடியாது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சென்னைவாசிகள் உறைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 40,498 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 31-ம் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழக அளவில் 22,333. சென்னையில் 14,802. அதன்பின் கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழக அளவில் கொரோனா தொற்று 82.23% அதிகரித்திருக்கிறது. சென்னையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் மே மாத இறுதி வரை ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் இரட்டிப்பாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களாக சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பது ஒருபுறமிருக்க, அது படிப்படியாக அதிகரித்து நேற்று 1500-ஐ நெருங்கியுள்ளது. இது நிச்சயமாக மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயம் என்பதில் ஐயமில்லை.


சென்னையில் கடந்த சில நாட்களாக சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது குறித்து மக்களிடம் விளக்கி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம். சென்னையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெற முடியாது; ஒத்துழைப்பை பெறாமல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அதற்கான பொறுப்புகளில் இருப்பவர்கள் உணர வேண்டும். இதுதான் சென்னையில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதன்மை நடவடிக்கை.
சென்னையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமானால், களநிலைமை என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் உத்தேசமாக எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம்? அவர்களை கண்டறிய சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் எத்தகைய அணுகுமுறையை கையாளப் போகின்றன? ஒவ்வொரு நாளும் சென்னையில் எத்தனை பேருக்கு சோதனை நடத்தப்படவிருகிறது? அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் எத்தனை நாட்களுக்குள் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்? என்பதை மக்களுக்கு தெரிவித்தால் மட்டும்தான் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், சென்னையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6000 பேருக்கு மட்டும்தான் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் 10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது; வெளியில் வந்தால் முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும், மீண்டும் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வை  ஏற்படுத்தினாலும் கூட, அதை பெரும்பான்மையான மக்கள் பொருட்படுத்தாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

 
சென்னையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சென்னையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது வாடிக்கையாகி விட்டது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை; மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து சென்னை மாநகர மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் வெளியில் வந்தால் முகக்கவசம் அணிவதையும், வெளியில் சென்று வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.