பாமகவில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள்படை ஆகிய 3 படைகள் உள்ளன. 90 தொகுதிகளில் இந்த படைகளை அமைக்க வேன்டும் என்பதுதான் நமது இலக்கு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். “பாமக தொடங்கி 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதற்கு முன் 10 ஆண்டுகள் மக்களுக்காகப் போராடியிருக்கிறேன். ஆனால், பாமகவால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் நாம்தான் முதலில் போராடுகிறோம். ஆனாலும், நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுவரை 29 அமைப்புகளை நான் உருவாக்கியிருக்கிறேன். இப்போது இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழிகாட்டுவதற்காக தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளேன். இது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும், அதனால் இளைஞர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.


தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் 108 சமுதாயங்கள் உள்ளன. அந்த 20 சதவீதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் அந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர்கள் நாங்கள். எனவே 20 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த இட ஒதுக்கீட்டின் அளவை தெரிவிக்க வேண்டும். அதற்காக ஓர் ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 சதவீதத்தில், அந்தப் பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 18+1 = 19 சதவீத இட ஒதுக்கீடு தவிர மீதமுள்ள 81 விழுக்காட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதற்காக இருவர் அல்லது மூவரை உறுப்பினர்களாகக் கொண்ட தனி ஆணையத்தை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அந்த ஆணையம் டிசம்பர் மாதத்திற்குள் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் 3 மாதங்களில் நடக்க வேண்டும்.