Asianet News TamilAsianet News Tamil

துரோகத்தை மறுக்க முடியுமா?...ஸ்டாலினிடம் கேள்விகளால் தெறிக்கவிடும் ராமதாஸ்!!

வாக்காளர்களை விலைக்கு வாங்க மிகவும் அப்பட்டமாக முயற்சி மேற்கொண்டவர்கள் கையும், களவுமாக மாட்டிக்கொண்டதால் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதியின் பொதுத்தேர்தல், வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடையவுள்ள நிலையில், தங்களின் பிரதிநிதி யார்? என்பதை வேலூர் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கூறியுள்ளார்.

Dr.Ramadoss criticised mk stalin
Author
Chennai, First Published Aug 2, 2019, 4:26 PM IST

வாக்காளர்களை விலைக்கு வாங்க மிகவும் அப்பட்டமாக முயற்சி மேற்கொண்டவர்கள் கையும், களவுமாக மாட்டிக்கொண்டதால் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதியின் பொதுத்தேர்தல், வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடையவுள்ள நிலையில், தங்களின் பிரதிநிதி யார்? என்பதை வேலூர் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூர் தேர்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில்; வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் யார் வெற்றி பெற்றால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதை நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு உண்டு. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்த 38 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அந்த அணி எவ்வாறு வெற்றி பெற்றது? அதற்காக அளித்த பொய்யான வாக்குறுதிகள் எத்தனை? என்பதை மக்கள் தாமதமாகவே அறிந்தனர். அவர்களைப் போன்று வேலூர் தொகுதி மக்களும் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவருக்கு ஆசை காட்ட வேண்டும் என்பது பொன்மொழி. அதேபோல் தான் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கோ, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றவோ வாய்ப்பே இல்லாவிட்டாலும், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி, கல்விக்கடன், பயிர்க்கடன் ஆகியவற்றுடன் 5 பவுன் வரையிலான நகைக்கடன்களும் ரத்து செய்யப் படும் என்று நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களுக்கு ஆசை காட்டியது. அதை நம்பி திமுகவுக்கு வாக்களித்த மக்கள், தங்களின் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை செலவழித்து விட்டு மீட்க வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மக்களவைக்கு அனுப்பப்பட்ட 37 உறுப்பினர்களும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான வகையில் செய்த பணிகள் என்ன? படைத்த சாதனைகள்? என்ற வினாவுக்கு இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். அவ்வாறு இருக்கும் போது வேலூர் தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்து, அக்கட்சியின் உறுப்பினரை நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்புவது என்பது விழலுக்கு இறைத்த நீராகவே அமையும்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் முன்வைக்கப்படும் முதன்மை பரப்புரையே, இஸ்லாமிய மக்களின் தோழன் திமுக என்பது தான். இதை விட பச்சைப் பொய் ஒன்று உலகத்தில் இருக்க முடியாது. இஸ்லாமிய மக்களுக்கு திமுக செய்த துரோகங்கள் கணக்கிலடங்காதவை. கடந்த 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியில் வர முடியாத அளவுக்கு சோதனைச் சாவடி அமைத்து சிறை வைத்தது யார்.... அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக அரசு தானே? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு கோட்டைமேடு பகுதியிலிருந்து வெளியே செல்லும் இஸ்லாமியரை சோதனை என்ற பெயரில் சிறுமைப்படுத்தியது திமுக அரசு தான் என்பதை எவரும் மறுக்க முடியுமா?

மாறாக, கோட்டைமேடு சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும் என்று வலிமையான போராட்டம் நடத்தியதும், அதற்காக கைது செய்யப்பட்ட போது, கோட்டைமேடு சோதனைச்சாவடி அகற்றப்படாவிட்டால் வட தமிழகத்திற்கு வரும் எந்த வாகனமாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் சோதனைக்கு பிறகே உள்ளே நுழைய முடியும் என்று எச்சரித்து, உடனடியாக சோதனைச்சாவடியை அகற்ற வைத்ததும் இந்த ராமதாசு தான். இந்த உண்மையை  ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

இஸ்லாமிய மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருந்த அப்துல்சமது தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை, தமது அரசியல் நலனுக்காக சமது அணி- லத்தீப் அணி என இரண்டாக உடைத்தது திமுக தானே? அவர்கள் இருவரையும் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக பேச வைத்து இணைத்து வைத்தது இந்த இராமதாசு தான் என்பதையும் திமுகவினரால் மறுக்க முடியுமா?

2014&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு எதிரான பணியாற்றி, அவரை மூன்றாவது இடத்திற்கு தள்ள வைத்து துரோகம் செய்தது திமுக என்பதை மறுக்க முடியுமா?

திமுகவைச் சேர்ந்த ஆ.இராசாவுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்த தொழிலதிபர் சாதிக் பாட்சாவை, 2ஜி வழக்கில் திமுக தலைமையின் தொடர்பை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சம் காரணமாக அவரை மர்மமான முறையில் இறக்க வைத்தவர்கள் யார்? இன்று வரை சாதிக்பாட்சாவின் மனைவியை மிரட்டிக் கொண்டிருப்பது யார்? என்பதை திமுகவால் கூற முடியுமா?

அவ்வளவு ஏன்?...... அண்மையில் நாடாளுமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதை ஆதரித்து திமுக வாக்களித்தது. இது இஸ்லாமிய மக்களுக்கு திமுகவால் இழைக்கப்பட்ட துரோகமா.... இல்லையா? இஸ்லாமியர்களின் தோழன் என்று கூறிக் கொள்ளும்  ஸ்டாலின் அவர்களால் இதை மறுக்க முடியுமா?

பட்டியலிட முடியாத அளவுக்கு இவ்வளவு துரோகத்தை செய்த திமுகவை இந்த தேர்தலில் இஸ்லாமிய நண்பர்கள் நம்பி வாக்களித்தால், அது தங்களுக்கு தாங்களே தேடிக் கொள்ளும் துன்பமாகத் தான் இருக்கும். அதேநேரத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெறச் செய்தால், வேலூர் தொகுதியின் தேவைகளை மத்திய அரசிடம் போராடி நிறைவேற்றுவார். வேலூர் வாக்காளர்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக் கொடுப்பார். எனவே, வரும் 5&ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் துரோகத்தின் சின்னமான திமுகவை வீழ்த்தி, அதிமுகவை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios