Asianet News TamilAsianet News Tamil

உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒரு நீதி, ஓபிசிக்கு ஒரு நீதியா.? மத்திய அரசின் சமூக அநீதி.. கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காக மருத்துவக் கவுன்சில் விதிகளையும், பொருந்தாத நீதிமன்றத் தீர்ப்புகளையும் காரணம் காட்டும் மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான பொதுப்பிரிவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு (EWS) எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Dr.Ramadoss attacked central government on 27% reservartion
Author
Chennai, First Published Jul 18, 2020, 8:59 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதும், அதற்காக மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்; இது கண்டிக்கத்தக்கது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் நேற்று இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது மத்திய அரசின் சார்பிலும், இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும் வாதிட்ட வழக்கறிஞர்கள்,‘‘இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது. தகுதி அடிப்படையில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடர்பாக பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளனர்.

Dr.Ramadoss attacked central government on 27% reservartion
மத்திய அரசுத் தரப்பிலான இந்த வாதங்கள் முழுக்க முழுக்கத் தவறானவை. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ‘மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் -2006’’ என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 93-வது திருத்தம் ஆகும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகும். அந்த சட்டத்தின்படி மும்பையிலுள்ள ஹோமிபாபா தேசிய நிறுவனம் உள்ளிட்ட 8 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அத்தகைய சூழலில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த முடியாது என்று கூறும் உரிமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கிடையாது. நாடாளுமன்றத்தை விட மருத்துவ கவுன்சில் பெரிய அமைப்பு அல்ல.Dr.Ramadoss attacked central government on 27% reservartion
அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து அசோகா குமார் தாக்கூர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மருத்துவ மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடர்பாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாக மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கூறுவது ஏமாற்றும் வேலையாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மூன்றாவதாக மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பட்டியலின மாணவர்களுக்கு 15% இடங்களும், பழங்குடியின மாணவர்களுக்கு 7.5% இடங்களும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருப்பது உண்மைதான். ஆனால், அது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது அல்ல. மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம், பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அபய்நாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த முடிவுமே எடுக்காத நிலையில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிதான், தானாக முன்வந்து பட்டியலினம், பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்திற்கு மனு மூலம் தெரிவித்தார்.
அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 27% இட ஒதுக்கீடு கோரி நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அதற்கு மாறாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஓதுக்கீடு வழங்க அவசியமில்லை என்ற தொனியில் மத்திய அரசு கூறிவருவது அதன் சமுகநீதிக்கு எதிரான மனநிலையையே வெளிப்படுத்துகிறது.Dr.Ramadoss attacked central government on 27% reservartion
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்க்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காக மருத்துவக் கவுன்சில் விதிகளையும், பொருந்தாத நீதிமன்றத் தீர்ப்புகளையும் காரணம் காட்டும் மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான பொதுப்பிரிவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு (EWS) எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது? அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி உச்சநீதிமன்றம் எப்போது அனுமதி அளித்தது? உயர்கல்வி நிறுவனங்களின் பொது இடங்களில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கே இன்னும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்காத நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டம் வகை செய்கிறது? உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்னொரு நீதி என்பது சமூக நீதி அல்ல.... சமூக அநீதி.
எனவே, இனியும் தாமதிக்காமல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதன்மூலம் இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.” என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios