தமிழகத்தில் 80 லட்சம் வாக்குகளை நாம் வாங்கினால், பாமக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பாமகவோடு அதிமுக கூட்டணி அமைக்காமல் போயிருந்தால், அதிமுக தற்போது ஆட்சியில் இருந்திருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.


இதேபோல இந்தக் கூட்டத்தில் பாமக ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பேசியுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  தனித்து போட்டியிட்டு ஆட்சியமைப்போம் என்று பாமக  தனி ஆவர்த்தனம் காட்டியது. மேலும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது பாமக ஆட்சி  என்ற கோஷத்தை பாமக எழுப்பிவருகிறது. திண்டிவனத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ் இதை எதிரொலித்தார்.
இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “2020 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தொண்டர்களாகிய நீங்கள் உழைக்கும் உழைப்பு,  80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளை பாமக பெற வேண்டும். 80 லட்சம் வாக்குகளை நம்மால் பெற முடிந்தால், பாமகதான் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். இப்போது முதலே நம் கட்சியினர் மிதிவண்டி, இருசக்கர வாகனம் என ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக பாமகவில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு காலமே உள்ளது. அதிமுகவோடு கூட்டணியில் இருந்தாலும் வட மாவட்டங்கள் உள்பட பாமக செல்வாக்காக உள்ள 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற பாமகவில் இலக்கு நிர்ணயித்து ஏற்கனவே பணிகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.