ஹைதராபாத் நகரம்  பெரு வெள்ளத்தால் பேரிழப்பை சந்தித்தபோதும் கூட இதுவரை மோடி அரசு உதவ முன்வரவில்லை என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சமீபத்தில் " மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசின் உதவி " என்ற தலைப்பில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநில அதிகாரிகள் கலந்துகொண்டு முதல்வர் சந்திரசேகர்ராவுடன் கலந்துரையாடினார். அப்போது வெள்ள பாதிப்புக்கு உடனடியாக நிவாரணமாக 1, 350 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாகவும் ஆனால் இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்றும் அக்கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலுங்கானாவில் கன மழை மற்றும் வெள்ளம் குறித்து குடியரசுத் தலைவர் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் மத்திய அரசின் வெள்ள நிவாரண குழு மாநிலத்திற்கு வருகை தந்து வெள்ள பாதிப்பு நிலைமையை மதிப்பீடு செய்தது. பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்த மத்திய அரசு தற்போது வரை அவ்வாறு எதையும் வழங்கவில்லை. வெரும் வெற்று வாக்குறுதிகளை மட்டும் மத்திய அரசு அளிக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

எங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு இதுவரை நிவாரண நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலம் பேரிழப்பை சந்தித்த போதிலும், இந்த விஷயத்தில் ஒரு ரூபாய் கூட உதவ மத்திய அரசு முன்வரவில்லை. மத்திய அரசின் உண்மை முகம் அதில் அம்பலமாகியுள்ளது நாட்டில் ஹைதராபாத் போன்ற ஒரு பெரும் நகரம் இழப்பை சந்தித்த போதும் மத்திய அரசு நிவாரணம் வழங்க முன்வராதது மிகவும் வருந்தத்தக்கது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.