ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும் அளவில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு படுஜோராக  விற்பனை  நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் பரங்கிமலை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் போலீசார் செங்குன்றம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். 

அப்போது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த கருவாடு லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் கருவாடு மூட்டைகளுடன் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்து கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக லாரியை ஒட்டி வந்த செங்குன்றத்தை சேர்ந்த  முத்துகிருஷ்ணன்(36) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி கடத்தி வந்து சென்னை, புறநகர் மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. 

போலீசார் மடக்கும் போது கஞ்சா நெடி தெரியாமல் இருக்க கருவாடுகளுடன் மறைத்து வைத்து கொண்டு வருவதாக  திடுக்கிடும் தகவங் வெளியானது. இதையடுத்து கஞ்சா வாங்க வந்த சோழவரத்தை சேர்ந்த மகேஷ்(29), புழலை சேர்ந்த முரளி(30), திண்டுக்கல் பகுதி கஞ்சா வியாபாரி மகுடிஸ்வரன்(35) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர்.  

இவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேருடன், கஞ்சா பரங்கிமலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மதுவுக்கு இளைஞர்கள் அடிமையாகி வரும் நிலையில் இப்போது அதை விட அதிக போதை தரும் கஞ்சாவுக்கு அடிமையாகும் கலாச்சாரம் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை அரசு தடுக்காவிட்டால் தமிழகம் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.