மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் முடிவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ;- ரஜினிகாந்த் நடத்தும் ஆலோசனை கூட்டத்தால் அரசியல் மாற்றம் எதுவும் நடக்காது.  வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினி தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதில் சிறப்பம்சம் ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது.

அதிமுக  மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். எப்போதும் கட்டுக்கோப்பாக தான் உள்ளோம். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது என தெரிவித்தார்.

மேலும், கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை, அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது. அப்படித் தடை உள்ள நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான். அரசியல் அராஜகத்திற்கு மொத்த உருவமே திமக தான் என விமர்சனம் செய்தார். நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதனை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.