தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய.பிரபாகரன் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சத்தியமங்கலத்தில் அவர் பேசுகையில், “தேர்தல் பிரசாரத்தில்கூட திமுகவும் அதிமுகவும் காசு கொடுத்து கூட்டத்தைச் சேர்க்கிறார்கள். இப்போது கொரானா வராதா என கேட்க விரும்புகிறேன். தற்போது மொழி, மதம், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அரசியல் கேவலமாகப் போய்கிறது. சினிமாவில் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அரசியலில் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. என்னைப் போன்ற இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தேர்தலில் இப்போதுதான் முதன் முறையாகப் பிரசாரம் செய்கிறேன். இதே கோபிச்செட்டிப்பாளையத்தில் சினிமா படப்பிடிப்புக்காக அப்பா பல நாட்கள் தங்கியிருக்கிறார். எனவே, இந்தத் தொகுதி எங்களுக்கு அறிமுகமான தொகுதி. தேமுதிக மாற்றத்தை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய  கட்சிகளுக்கு கொடுத்த மரியாதையை அதிமுக தரவில்லை. தற்போது மக்கள் பிரச்சினையை மனதில் வைத்துதான் கூட்டணி அமைத்துள்ளோம். அரசியலில் ஈடுபடும் என்னை போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். 
தேர்தல் பிரசாரத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தற்போது 1000, 1500 ரூபாய் தருகிறேன் எனச் சொல்கிறார்கள். இவர்கள் கொரானா காலத்தில் மக்கள் கெஞ்சி கேட்டும் தரவில்லை. ஓட்டுக்காக இப்போது பேரம் பேசுகிறார்கள். சிந்தியுங்கள் மக்களே. நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போய்விடாதீர்கள். உங்களால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியாதா?” என்று விஜய பிரபாகரன் பேசினார்.