Asianet News TamilAsianet News Tamil

மொழி உணர்வில் விளையாட வேண்டாம்..!! மத்திய அரசுக்கு கி .வீரமணி எச்சரிக்கை..!!

பிரதமர் முதல் பல பா.ஜ.க. தலைவர்கள் வரை தாய்மொழிபற்றி மிகவும் பேசுகின்றனர். விமானங்களில் அறிவிப்புகளில் - மற்ற நாட்டு விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் இடம்பெறும்போது, நம் நாட்டு விமானங்களில்  வெறும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் இடம் பெறுவானேன்?

  

Dont play with language sense, Veeramani warns Central Government
Author
Chennai, First Published Aug 11, 2020, 11:21 AM IST

சென்னை விமான நிலையத்தில் கவிஞர் கனிமொழி எம்.பி,க்கு ஏற்பட்ட சம்பவம் கொடுமையான அனுபவம் என்றும், அதே நேரத்தில் மொழிப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது எனவும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கவிஞர் கனிமொழி 9.8.2020 அன்று டில்லிக்குப் புறப்பட்டுச் செல்ல சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். விமான நிலையச் சோதனையை முடித்துச் செல்லும் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.அய்.எஸ்.எஃப்) பெண் அதிகாரி ஒருவர், கொரோனா தடுப்பு நிகழ்ச்சிகள் பற்றி ஹிந்தியில் கூறினார். ஆனால், கனிமொழி எம்.பி., அவர்கள் `எனக்கு ஹிந்தி புரியவில்லை; ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்' என்றார். இதையடுத்து அந்தப் பெண் அதிகாரி கனிமொழியிடம், "நீங்கள் இந்தியரா?''  என்று கேட்டதையடுத்து, கனிமொழி எம்.பி., அதிர்ச்சி அடைந்ததோடு, விமானம் புறப்பட வெகுகுறைவான நேரமே இருந்ததால், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு, டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Dont play with language sense, Veeramani warns Central Government

எவ்வளவு கொடுமையான அனுபவம் பார்த்தீர்களா? அதுவும் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னை விமான நிலையத்திலே, பல லட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிக்கே, ஹிந்தி மொழியை வைத் துத்தான் அவரை இந்தியர் என்று அளக்க வேண்டிய, அடையாளப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பது விரும் பத்தக்கதா? இந்தச் சம்பவம் ஒரு சாதாரண நிகழ்வு போல - மேலெழுந்தவாரியாகப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்; ஆனால், இந்தக் கேள்விக்குள் தொனிக்கும் ஹிந்தி ஆதிக்கத் திணிப்பும், ஆணவச் சூழ்நிலையும், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பின் கோரமுகமும் இதன்மூலம் தெரியவில்லையா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில் அரசமைப்புச் சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ள மொழிகள் 22.

 Dont play with language sense, Veeramani warns Central Government

அதில், இந்திய ஆட்சி மொழியான இந்தியும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் அதிகாரிகள், தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு வருகிறவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மாநில அரசில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதி காரிகளுக்கும்கூட விதிக்கப்பட்டுள்ள அரசின் கோட்பாடு. எந்த மாநிலத்தில் பணி செய்யச் செல்லுகிறார்களோ, அந்த மாநில மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது ஆளுமைக்குத் துணை புரிய உதவும் என்பதால்! அதுபோல, எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், மத்திய அரசுத் துறை அதிகாரிகள், அந்த மாநில மொழியை அறியவேண்டும் அல்லது அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும் என்ற குறைந்த அளவு நாகரிகம் தேவையல்லவா? இந்தி மொழி திணிப்பு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் மிகவும் அதிக மாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே (ஹிந்தி அல்லாத மற்ற மொழியினருக்கும்) மசோதாக்களின் நகல்கள் ஹிந்தியில் மட்டும் அனுப்பப்படுகின்றன. சபாநாயகர் உள்பட பலரும் இந்தியிலேயே நடவடிக்கைகளை நடத்துகின்றனர்.

Dont play with language sense, Veeramani warns Central Government

 எல்லா மத்திய நலத் திட்டங்களின் பெயர்களும் வாயில் நுழையாத ஹிந்திப் பெயர்களாகவே உள்ளன. புரியும் மொழியில் சொல்லப்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 22 மொழிகளில் - எந்தெந்தப் பகுதிக்கு எந்தெந்த மொழிகள் உரியவையோ, அங்கே விமானங்கள் பறக்கும்போது செய்யப்படும் அறிவிப்புகள் முதல், பரிசோதனை அதிகாரிகள்வரை அந்தந்த மொழி தெரிந்தவர்களையோ அல்லது அனைத்து மொழியாளர்களுக்கும், நடைமுறையில் உண்மையான இணைப்பு மொழியான ஆங்கிலத்தையோ பயன்படுத்துவதுதானே, ஆளுமைக்கு உரிய சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும்.எந்த நோக்கத்திற்காக அது செய்யப் படுகிறதோ, அந்தநோக்கம், அந்த மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட்டால்தானே நிறைவேறி பலன்தர முடியும். பிரதமர் முதல் பல பா.ஜ.க. தலைவர்கள் வரை தாய்மொழிபற்றி மிகவும் பேசுகின்றனர், விமானங்களில் அறிவிப்புகளில் - மற்ற நாட்டு விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் இடம்பெறும்போது, நம் நாட்டு விமானங்களில் வெறும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் இடம் பெறுவானேன்? 

Dont play with language sense, Veeramani warns Central Government

மும்மொழித் திட்டம் என்று கல்வியில் திணிக்க முயலும் இவர்கள், பயணிகள் வசதிக்காகத் தமிழ்நாட்டு உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு ஏற்ப ஏன் தமிழில் அறிவிப்புகளைச் செய்யக் கூடாது? எந்தெந்த மாநிலங்களில் விமான சேவை உள்ளதோ, அந்தந்தப் பகுதியில் அவரவர் மொழியில் கூறினால், அறிவிப்பின் நோக்கம் நிறைவேறும். இன்றேல் அது வெறும் கூச்சல் போலத்தானே ஆகிவிடும். 

தமிழ்நாட்டு எம்.பி.,க்கள், ஒத்த கருத்துள்ள, மற்ற மொழியாளர்களான எம்.பி.,க்களும் கலந்து இதற்கு ஒரு மாறுதலை உருவாக்கப் போதிய அழுத்தம் தர முன்வரவேண்டும். மொழிப்பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. தமிழக அரசும் இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழி உரிமை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மொழிக் கொள்கைப் பாதுகாப்புப் பிரச்சினையாகப் பார்த்து, மத்திய அரசுக்குத் தனது கருத் தினை எழுதி வலியுறுத்தவேண்டியது முக்கியக் கடமை! ஒருமைப்பாட்டு மண்ணுக்கல்ல - மக்களுக்குத்தான்! மொழித் திணிப்பினால் ஒருமைப் பாட்டை ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.`ஒருமைப்பாடு - மண்ணுக்கல்ல; மக்களுக்குத்தான்' என்ற அடிப்படையான உணர்வை அலட்சியப்படுத்தவேண்டாம்!என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios