தமிழக சட்டப்பேரவை விவாதத்தின்போது, தன்னைப் பற்றி புகழ வேண்டாம் என்றும், நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினால் போதும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் செயல்கள், திட்டங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இன்றைய விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் யாரும் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்றார். இதனால் வீணாக நேரம் விரயமாகிறது. எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினால் போதும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு, மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் தரவில்லை; உங்களால் முடியவில்லை என்றால் காவிரி விவிகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி தலைவர் குறித்து புகழ்ந்து பேசுவது வாடிக்கை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவரை புகழ்ந்து பேசுவதில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் போட்டி போட்டுவதுண்டு. இதுபோன்ற புகழ்ச்சிகள், நேரத்தை வீணடிப்பதை போல் உள்ளது என்பதால்,
சட்டப்பேரவையில் தன்னை புகழ வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.