பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கும், மற்ற காவல்துறை அலுவலகங்களுக்கும் நேரில் செல்லாமலே பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெறும் வகையில் புதிய சிட்டிசன் போர்ட்டலான “துணை”   என்ற செயலியை கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த துணை சிட்டிசன் போர்ட்டல் மூலமாக அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைனில் புகார் அளிக்க முடியும். ஆன் லைன் புகாரின் மீதான நடவடிக்கை குறித்து அறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நகலும் ஆன்லைனில் கிடைக்கும். காவல்துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ்கள் பெறவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சந்தேகத்துக்குரிய நிகழ்வுகளில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் அளிக்கவும், காணாமல்போன நபர்களின் பெயர் விவரம் தெரிவிக்கவும், அவர்களைப்பற்றிய குறிப்புகளை அளிக்கவும் இந்த போர்ட்டலில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள், காவல்துறை கையேடு, நிலையாணைகள், கிரைம் இன் இந்தியா போன்றவை இடம்பெற்றுள்ள ஆன்லைன் நூலகமும் இந்தபோர்ட்டலில் உள்ளது.

மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், போராட்டங்கள், பேரணிகள், பிரச்சார இயக்கங்கள் நடத்த காவல்துறையின் அனுமதி கோரும் விண்ணப்பங்களையும் இந்த செயலி மூலம் சமர்ப்பிக்கலாம்.

ஒரு வாகனம் ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்புடையதா என்பதை தெரிந்து கொள்ளவும், வாகனங்கள் எந்த ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்டதல்ல என தடையில்லா சான்று (எம்ஓசி) பெற விண்ணப்பிக்கவும், என்ஓசியை ஆன்லைனில் பெறவும்  இந்த செயலி உதவுகிறது.

காவல்துறை நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இதன் மூலம் தெரிவிக்கலாம். காவல்துறையினர் குறுஞ்செய்தி, இ-மெயில் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கவும் முடியும் என இதனை வெளியிட்டுள்ள கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரள முதலமைச்சரின் புதுமை நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் இதற்கு கேரள மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.