மாமல்லபுரம் வருகை தந்த சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இரண்டு நாட்கள் தமிழகத்தில் முகாமிட்டு தங்கியிருந்தார். நேற்று மாலை மாமல்லபுரத்தில் சீன பிரதமரை வரவேற்கும் வகையில் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து உற்சாகமாக காட்சியளித்தார். இது தமிழர்களை பெருமையடையும் வகையில் அமைந்தது.

நேற்று இரவு சீன அதிபருக்கு பிரதமர் மோடி வழங்கிய விருந்தில் தமிழக உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மேலும் சீன அதிபரை வரவேற்று ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருந்தார். இவை அனைத்தும் தமிழர்களை மகிழ்ச்சியடைய செய்வதாக இருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #GoBackModi என்கிற வாசகத்தை இணையத்தில் சிலர் ட்ரெண்ட் ஆக்குவார்கள். நேற்றும் அது ட்ரெண்ட் ஆகியது. சீன அதிபரை வரவேற்றும் பிரதமர் மோடியை எதிர்த்தும் ஹாஸ்டேக்களை சிலர் பகிர்ந்திருந்தார்கள். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இதனிடையே இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று பிற்பகலில் பிரதமர் மோடி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அவரை தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில்  #DontGoBackModi  என்கிற வாசகம் கடந்த சில மணி நேரமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இரண்டு நாட்கள் நடந்த மாமல்லபுரம் சந்திப்பில், பிரதமர் மோடி தமிழை உலகவில் பெருமையடைய வைத்து விட்டதாகவும், அதன் அன்பின் வெளிப்பாடே இந்த வாசகம் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.