காவிரி நீரில் தமிழகத்தின் பங்கை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரும் ஜூலை மாதத்துக்கு  31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய விதத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

கொரோனா பேரிடர் காலத்தில் எல்லா தொழில்களும் முடங்கிவிட்ட நிலையில் விவசாயத்தை மட்டுமே நாம் பெரிதும் நம்பி இருக்கின்றோம், ஜூலை 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதிலும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவிரியில் நமக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருவது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாமதப்படுத்தி வந்துள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறுதான் அது நடந்து கொள்கிறது. ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கும் சேர்த்து 40.43 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் ஆர்.கே ஜெயின் உத்தரவு பிறப்பித்தார். 

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ள நிலையிலும்கூட இதுவரை 9 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு  வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை தர வேண்டும் என மிகவும் மென்மையாகவே கூறப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது. தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தரவேண்டியது தமிழக முதல்வரின் கடமையாகும், தனது கூட்டணி கட்சியான பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக அரசிடம் உரியமுறையில் வலியுறுத்தி தமிழகத்தின் உரிமையை தமிழக முதலமைச்சர் நிலைநாட்ட வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணிக்காக தமிழகத்தில் காவிரி நீர் உரிமையை காவு கொடுத்து விடவேண்டாம் என சுட்டிக் காட்டுகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.