கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரையிடம் 1000 ரூபாய்க்கு குறைவாக வாங்காதீர்கள் என முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவில் இருந்தபோதே தம்பித்துரைக்கு எதிராக செய்ல்பட்டவர் செந்தில்பாலாஜி. தனக்கு வரவேண்டிய அமைச்சர் பதவியை தம்பிதுரை ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து வரவிடாமல் தடுத்தார் என்கிற கோபம் செந்தில் பாலாஜி மனதில் வைராக்கியமாக பதிந்து விட்டது. இந்நிலையில் திமுகவுக்கு வந்து விட்ட செந்தில் பாலாஜியை எதிர்க்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். 

மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்கி இருக்கிறார் தம்பிதுரை. அவரை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

கரூரில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி பேசினார். அப்போது, ’’மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பித்துரை தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களில் அவருக்காக நான் வாக்கு கேட்டு வந்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.

மத்திய அரசு ஒதுக்கிய தொகுதி நிதியை தவிர வேறு என்ன சிறப்பு திட்டத்தை கரூக்கு தம்பித்துரை கொண்டு வந்தார்?. எதுவுமே கொண்டு வரவில்லை. அவர் ஒவ்வொரு வாக்களார்களுக்கும் 1000 ரூபாய் கொடுக்க சொல்லி இருப்பதாக தகவல் வந்து கொண்டு இருக்கிறது. அவர் ரூ.1000 க்கு குறைவாக கொடுத்தால் வாங்காதீங்க. தம்பித்துரைக்கு சொந்தமாக நிறைய கல்லூரிகள் இருக்கு. அவர் தன்னுடைய கல்லூரிகளில் யாராவது ஒரு மாணவ- மாணவிக்கு இலவசக் கல்வி கொடுத்திருக்காறா?’ என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.