"சசிகலா ஏற்கனவே அறிவித்ததுபோல அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் அவருக்கு நல்லது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்காக இனி யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.”
சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாகிவிட்டதால் இனி பொதுவெளியில் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு
சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவுப் பிறப்பித்தது. சசிகலாவை நீக்கும் அதிமுக பொதுக் குழுவின் தீர்மானம் செல்லும் என்று நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகளான ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, பா.வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ் உத்தரவு
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு 7.30 மணி அளவில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக வந்த தீர்ப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ‘சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்திருப்பதால், இனி அவரைப் பற்றி பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். அவரை விமர்சிக்கவும் வேண்டாம். ஏனெனில் சசிகலாவுக்கும் கட்சிக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்றாகிவிட்டது. நாம் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அதை அவர் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடும். அதேபோல சசிகலாவின் கருத்துகளுக்கும் இனி அதிமுகவில் பதிலளிக்க வேண்டாம். அதிமுகவின் கொடி, சின்னம் போன்றவற்றை சசிகலா பயன்படுத்தினால், நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுப்போம்’ என்று கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயக்குமார் விளக்கம்
கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2017-ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படிதான் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. சசிகலா ஏற்கனவே அறிவித்ததுபோல அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் அவருக்கு நல்லது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்காக இனி யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.” என்று ஜெயககுமார் தெரிவித்தார்.
