கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் மாறி மாறி பேசி வந்த நிலையில் கூட்டணி முறியும் சூழல் உருவானதை திமுக தலைமை தற்போது விரும்பவில்லை என்கிறார்கள்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென கே.எஸ்.அழகிரி – கே.ராமசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை தான் கடந்த ஒரு வார காலமாக தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே திமுக – காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேலைகள் நடைபெற்று வந்தன. இதனை உணர்ந்தே காங்கிரசுக்கு சுமார் பத்து தொகுதிகள் வரை ஒதுக்கி கூட்டணியை தக்க வைத்தார் ஸ்டாலின். இதற்கு காரணம் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கை தான்.

ஆனால் மீண்டும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக – காங்., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதனால் காங்கிரசுடனான கூட்டணியை திமுக தொடர்ந்தது. அதிலும் இடைத்தேர்தலில் நாங்குநேரியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் அளவிற்கு கூட்டணி தர்மத்துடன் திமுக நடந்து கொண்டது. இந்த சூழ்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி தரவில்லை என்று கூறி கே.எஸ்அழகிரி வெளியிட்ட அறிக்கை தான் வில்லங்கமானது.

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை புதிய கூட்டணி அமைத்து எதிர்கொள்ள திமுக ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். இதனால் இந்த விஷயத்தை மையமாக வைத்து கூட்டணியில் இருந்து காங்கிரசை கழட்டிவிட திமுக திட்டமிட்டதாகவும் பேச்சுகள் அடிபட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசுக்கு வாக்கு வங்கியே இல்லை, அவர்கள் கூட்டணியை விட்டு போனாலும் போகட்டும் என்று தடலாடியாக அறிவித்தார் துரைமுருகன். இந்த பேச்சுக்கு உடனடியாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி பதிலடி கொடுத்தார்.

இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இன்னும் ஒரு வாரம் கூட தாண்டாது என்று பேசப்பட்டது. இந்த நிலையில் திடீரென செய்தியாளர்களை அழைத்து திமுக கூட்டணியில் தற்போதும் காங்கிரஸ் உள்ளது, அவர்கள் விலகவில்லை என்று துரைமுருகன் விளக்கம் அளித்தார். இதற்கு காரணம் ஸ்டாலின் துரைமுருகனை தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக எதுவும் நெகடிவ்வாக பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது தான் என்கிறார்கள். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக  பேச திமுக தரப்பில் யாரும் முன்வரவில்லை.

துரைமுருகனுக்கு உத்தரவு போட்டது போல திமுகவின் முன்னனி நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கும் திமுக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது. கூட்டணி குறித்து யாரும் வாய் திறக்க கூடாது என்பது தான் அந்த உத்தரவாம். இது கூட்டணியை காப்பாற்ற அல்ல, எந்தவித சேதாரமும் இல்லாமல் கூட்டணியில் இருந்து விலகத்தான் என்று கூறுகிறது ஒரு தரப்பு. அதே சமயம் காங்கிரஸ் இல்லாமல் வேறு எந்த பெரிய கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.