Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் கற்பனை கதை.. முதல்வர் ஸ்டாலின் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீங்க.. வானதி சீனிவாசன்..!

தி.மு.க.வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை.

Don t be fooled by what CM Stalin says.. Vanathi Srinivasan
Author
First Published Dec 29, 2022, 10:14 AM IST

நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார். 

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற, 81-வது 'இந்திய வரலாற்று காங்கிரஸ்' மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான்" என, பேசியுள்ளார்.

Don t be fooled by what CM Stalin says.. Vanathi Srinivasan

முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர், கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, 'திராவிடம்' என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக, கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான், தி.மு.க.வின் அடிப்படை.  ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்.  அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத கட்டுக் கதையாக தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்துக் கொண்டு, யாருக்கோ பாடம் எடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்.

Don t be fooled by what CM Stalin says.. Vanathi Srinivasan

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், 'பிரித்தாளும் சூழ்ச்சி' மூலமே, நம்மை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாகவே, 1916-ல் தமிழகத்தில், 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' உருவானது. இதுவே பின்னாளில், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை, நீதிக்கட்சி தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிவினை பேசி அணைத்தது.

அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். இதுதான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், தி.மு.கவினர் இப்போது பேசுவதில்லை. உயிருக்கும் மேலான நம் தாய் மொழியை, 'காட்டுமிராண்டி மொழி' என்றும், உலகமே வியக்கும் திருக்குறளை, 'தங்க தட்டில் வைத்த மலம்' என்று விமர்சித்தவர் பெரியார் ஈ.வெ.ரா. கீழ்வெண்மணியில், பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் தேசத்தையே உலுக்கியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் ஈ.வெ.ரா. தி.மு.க. ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது என அவர்கள், சுய நலத்திற்காக, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்த வரலாறுகளை தனி புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். 

Don t be fooled by what CM Stalin says.. Vanathi Srinivasan

பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு யுனைஸ்கோ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.வினர். இவையெல்லாம் தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், இப்போது தி.மு.க.வினர் பேசுவதில்லை. இந்த உண்மையான வரலாற்றை மறைத்து, தமிழர்களை ஏமாற்றும் தந்திரத்தைதான், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருப்பார் என நம்புகிறேன். என்னதான் தி.மு.க.வினர் மறைத்தாலும், உண்மை தான் இறுதியில் வெல்லும். அதுவும் இது, தகவல் தொழில்நுட்ப யுகம். இப்போது எதையும் மறைக்க முடியாது. இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும். காலம் அதனை நிச்சயம் உணர்த்தும்.

இதே மாநாட்டில் பேசும்போது, “மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். அவருக்கு ஓர் உண்மை வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1950-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. 1975-ல் நாட்டில் நெருக்கடியை நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மிசா சட்டத்தின்கீழ், எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை எல்லாம் முடக்கிவிட்டுதான், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, இந்திரா காந்தி சேர்த்தார். இந்த வரலாற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Don t be fooled by what CM Stalin says.. Vanathi Srinivasan

'மதச்சார்பின்மை' என்பது மதங்களை 'மறுப்பது' அல்ல. அனைத்து மதங்களையும் 'சமமாக' பேணுவதே. ஆனால், தி.மு.க.வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்த மாநாட்டில், "பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியதையே நானும் வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய இந்து கோவில்கள் பற்றியும், அவர்கள் பின்பற்றிய இந்து தர்மம், கலாசாரம் பண்பாடு பற்றியும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள், மொகலாய மன்னர்கள், சுல்தான்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் குறிப்பிட வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios