வாக்களித்தவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை கிடையாதா? என்ற தொனியில் திண்டுக்கல்லில் கமல் ரசிகர்கள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கண்டனங்களுக்கு அவர் ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் நடந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் நடிகர் கமல் ஹாசன் ரசிகர்கள் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில், வாக்களித்தவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபோதையில் திரியும் நீங்கள் பொதுநலப் பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டிப் பார்க்காதே என்று கூறப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் வத்தலகுண்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.