தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் ஒரு பாடத்தை நீக்கியதற்கு ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. தீவிரவாதத்தை திமுக ஆதரிக்கிறதா ? என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "walking with comrades" என்ற புத்தகம் சார்ந்த பாடப்பகுதிகளை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் ஒரு பாடத்தை நீக்கியதற்கு ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

அருந்ததி ராய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஆயுத போராட்டம் என்பது 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்றது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்தது. அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுக இப்போது எதிர்ப்பதேன். மேலும் அந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலேயே இந்திய துணை ராணுவப்படைகள் மத்திய இந்திய பகுதிகளில் அந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிரான ஆப்ரேஷனை செய்தனர். என்றார். 

உண்மையான அக்கரை இருந்திருந்தால் திமுக அப்போதே தடுத்திருக்கலாமே? எனவும் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.  இந்நிலையில் பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் நூலை நீக்கியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது குறித்து தெரிவித்துள்ள அவர், கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளில் பறிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. அதிலும் பல்கலைக் கழக பாடத் திட்டங்கள் வாயிலாக பல்வேறு வகை கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம். உடனடியாக இத்தடையை நீக்கி மீண்டும் பாடமாக்க வேண்டும்.

பல்கலைக்கழக பட்டதாரிகள் பல்வகை சிந்தனைகளை தெரிந்துகொள்வது எப்படி தவறாகும்?  பாட புத்தகத்தில் வைக்கும் போது அதை தெரிந்துதானே பாடநூலாக வைக்கப்பட்டது. என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இப்படி நடக்கிறது என்றால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி செய்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.