உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் எச்சரித்துள்ளார். இது குறித்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்வதற்கு ஏதுவாக நான்கு புதிய 108 ஆம்புலன்ஸ்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தலா 100 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, விலை உயர்ந்த மருந்துகள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பான சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது.  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளனர்,  தனியார் உணவகங்கள் வாயிலாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உணவு அட்டவணைகளின் அடிப்படையில் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகள், அதனை தயாரித்து விநியோகிப்பதற்கு தேவையான கேன் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளிட்ட புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து அம்மா உணவகங்கள் வாயிலாக ஏழை எளிய பொது மக்களுக்கு தினமும் மூன்று வேலை உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமிய ஆதரவற்றவர்கள், விதவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு 500 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தொற்று நோய் பரிசோதனைக்கான வெப்பமானி கருவிகளும், நாடித் துடிப்பு மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் கருவிகளும் வழங்கப்பட்டது. விளைபொருள் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. நிலைமை இப்படி இருக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி தனியார் மருத்துவமனைகள் ஆதாயம் அடைந்தது போல தவறான செய்திகளை வெளியிடுவது தங்களது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் படித்தவர்கள், பண்பாளர்கள், அன்றாடம் பத்திரிக்கையில் வரும் செய்திகளை அறிந்தவர்கள், உண்மை நிலையை தெரிந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். செய்தியாளர்களை சந்தித்து செய்திகளைச் சொல்லும்போது தங்களது அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை கலந்து ஆலோசிக்காமல்  உண்மை நிலையை மறைத்து உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.