வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்கு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இறுதி கெடு விதித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி முதல் மருத்துவர்கள் ஈடுபட்டுவரும் இந்தப் போராட்டத்தால் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டுவருகிறார்கள்.  அரசு மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மக்களின் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
இந்நிலையில் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். பின்னர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களில் இதுவரை 2,160 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர். மக்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய அந்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கடலூர், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அரசு மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டார்கள்.  பிற மாவட்டங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும் பணிக்குத் தொடர்ந்து திரும்பி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்பிவிட வேண்டும். முதல்வரின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப அவர்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்று நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அதன் பிறகும் பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும். அந்தப் பதவிகளுக்கு புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்த தயார்” என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.