மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான மருத்துவ செலவு 5.5 கோடி ரூபாய் என அப்போலோ மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, மருத்துவர் பாலாஜி, மருத்துவர் பாபு உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று விளக்கமளித்தனர்.

அப்போது ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் பாலாஜி, அவரது மருத்துவச் செலவு 5.5 கோடி ரூபாய் என தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை எனவும், ஜெயலிதாவின் உடலில் எந்த உறுப்பும் அகற்றப்பட்ட வில்லை எனவும் தெரிவித்தார்.

தேர்தல் குறித்த ஆவணங்களை ஜெயலலிதா பார்த்ததாகவும், அவரது கையில் வீக்கம் இருந்ததால் அவரால் கையெழுத்து இட முடியவில்லை. எனவே கைரேகை பெறப்பட்டது எனவும் தெரிவித்தார்.