டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து போயின. இன்னும் நிவாரணப் பணிகள் அங்கு தொடர்ந்து வருகின்றன. அதேசமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு இடங்களிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், திரையுலத்தினர், தனிநபர்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரும், டாக்டருமான தமிழிசை செய்த செயல், சமூக வலைத்தளங்களில் கலாய்க்கும் நெட்டிசன்களையும் நெகிழவைத்துள்ளது. 

ஆமாம், பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி, தனது சொந்த செலவிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்தார். ஒரு நடமாடும் ஆம்புலன்சையும் தயார் செய்து 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்.

போகும் வழிகளில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியும், அவர்களுக்கு உடனடி தேவை என்ன என்பதையும் கேட்டு குறித்து கொள்கிறார். மறுநாள் அதில் முடிந்தவற்றை செய்து கொடுக்கிறார். மருத்துவ குழுவினருடன் பா.ஜனதா தொண்டர்களும் செல்கிறார்கள். தமிழிசையின் இந்த செயலை வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.