கடந்த நாடாளுமன்ற தேர்தல், இருபத்து ரெண்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் லோக்சபா தேர்தல் என எல்லாவற்றிலும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு அடின்னா அடி செமத்தியான அடி.  தொடர் தோல்விகளால் ஒரு கட்டத்தில் ஸீனை விட்டு வெளியேறிய நிலைக்குப் போய்விட்டார்  தினகரன். 

இந்த நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் போட்டியிட்டது அக்கட்சி. களத்தை விட்டு விலகி நின்றால் வீணாக அ.தி.மு.க. அமைச்சர்களின் அர்ச்சனைகளுக்கு ஆளாக வேண்டுமே! என்கிற அச்சத்தில், வருத்தத்தில்  களமிறங்கினர். தினகரனெல்லாம் பெரிதாக பிரசாரத்துக்கு கூட வரவில்லை. 

ஆனாலும் மாநிலமெங்கிலும் கவனக்கித்தக்க வகையில் வெற்றிகளைப் பெற்றிருக்கிறது அக்கட்சி. இது தினகரனை சிலிர்ப்புடன் எழுந்து உட்கார வைத்துள்ளது. அமைதியாக இருந்த அ.ம.மு.க.வினர் இப்போது மீண்டும் ஆர்ப்பரிப்புடன் பேச துவங்கியுள்ளனர். 

இந்த சூழலில், அ.தி.மு.க.வின் கூட்டணியில் வட தமிழக மாவட்டங்களில்  போட்டியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சிக்கான வாக்கு வங்கி அதிகமிருக்கும் வட மாவட்டங்களிலேயே இழுத்துப் பிடித்து, மூக்கை சிந்தி, ஏக நெருக்கடிகளுக்குப் பிறகுதான் ஸீட்களை கொடுத்தது ஆளும் அ.தி.மு.க. பல இடங்களில் இரண்டு தரப்புகளுக்கும் முட்டல் மோதல் வந்து எதிர்த்து நின்றுதான் போட்டியிட்டு தேர்தலை முடித்திருக்கின்றனர். 

பா.ம.க.வும் போட்டியிட்ட பகுதிகளில் கணிசமாக வென்றுள்ளது. இதை வைத்துக் கொண்டு ’தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி எனும் அந்தஸ்தை பெற்றுவிட்டோம். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில்  தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அதிக இடங்களில் வென்றிருப்பது நாங்கள்தான்.’ என்று பெருமை பேச துவங்கியுள்ளனர் அக்கட்சியினர். இது தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க. மற்றும் கம்யூனிஸ்டுகள், வி.சி.க. என அத்தனை பேரையும் கடும் எரிச்சலாக்கி இருக்கிறது. 

மற்றவர்கள் லேசுபாசாக ராமதாஸ் கட்சியை உரசிப் பேசிட, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமான தினகரன் கட்சியோ வெளிப்படையாக போட்டுத் தாக்கி வருகிறது பா.ம.க.வை. அக்கட்சியின் பொருளாளரும், தினகரனின் மிக  முக்கிய கையுமான வெற்றிவேல் “அது எப்படிங்க பா.ம.க.வை மூன்றாவது பெரிய கட்சின்னு அங்கீகரிக்க முடியும்? அக்கட்சி எத்தனை இடத்துல போட்டி போட்டுதுன்னு வெளிப்படையா சொல்லச்சொல்லுங்க. ஆனால் நாங்க தமிழ்நாடு முழுக்க  தொண்ணூற்று ஐந்து சதவீத இடங்களில் போட்டி போட்டிருக்கிறோம். ஆனால் ராமதாஸ் கட்சியோ பதினைந்து சதவீத இடங்களில் கூட போட்டி போடலை. 

எண்ணிக்கை, சதவீதம் இரண்டின் படியும் நாங்கள்தான் அதிகம். ஏழும் ஏழும் பதினாலுன்னு சரியா சொல்றதுக்கு பதிலாக, பதினெட்டுன்னு தப்பா சொல்கிறார் ராமதாஸ். ஏழாம் வாய்ப்பாடும், கூட்டல் கழித்தலும் தெரியாதா அவங்களுக்கு? 

அவருக்கு இது தெரியாதுங்கிறதுல ஒண்ணும் ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. ஏன்னா, அவரோட பழக்கம் எப்பவுமே அப்படித்தான். பஞ்சமி நில விவகாரத்தில் தி.மு.க.வை குற்றம் சாட்டிட்டே இருக்கிறார். ஏன் ஆளுங்கட்சி கூட்டணியிலதானே இருக்கிறார், பஞ்சமி நிலம் தொடர்பான ஆவணங்களை  எடுத்து வெளியிட வேண்டிதானே? ஏன் அமைதியா இருக்கிறார்!?” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். 

இவர் மட்டுமில்லை, அ.ம.மு.க.வில் எஞ்சியிருக்கும் முக்கிய தலைகள் அத்தனையுமே ராமதாஸின் கட்சியை இப்படித்தான் ‘என்ன காமெடிங்க இது? அவங்க எப்படிங்க மூன்றாவது பெரிய கட்சியாக முடியும்?’ என்றுதான் கிண்டலடித்து வறுத்தெடுக்கிறார்கள். 
இருங்க இருங்க டாக்டர ஊசி போட சொல்றேன்!