சுபஸ்ரீ மரணம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பெயரைக் குறிப்பிடாமல் மிகக் கடுமையாகத் தாக்கி பேசியிருப்பதாகக் கருதப்படுகிறது.


தமிழக அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜி பேசுவது அடிக்கடி சர்ச்சையாகிவிடும். மேலும் அதிரடியாகப் பேசுவதும் இவரது வாடிக்கையாகிவிட்டது. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று கமல் பேசியது சர்ச்சையானது. அந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, ‘கமல் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று பதில் விமர்சனம் செய்திருந்தார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பாக போலீஸில் புகார் அளித்தபோதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கமல் மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பெயரைக் குறிப்பிடாமல் கமல் விமர்சனம் செய்துள்ளார்.


 “அரசின் அலட்சியத்தால் ரகு, சுபஸ்ரீக்கள் கொல்லப்படுகின்றனர். கொஞ்சமாவது அறிவு வேண்டாமா, எங்கு பேனர் வைப்பது, வைக்கக்கூடாது எனத் தெரிய வேண்டாமா? இவர்களை போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காடு அரசியல்வாதிகளாலும், இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படப் போகிறதோ.எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால், 'நாக்கை அறுப்பேன்' என, மிரட்டுவதும்தான், இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்களின் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது.” மிகக் காட்டமாக கமல் விமர்சனம் செய்திருந்தார்.
‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் பேசியிருந்தார். இந்த வீடியோ பேச்சில், இந்த மாதிரி ஆட்களின் மீது எனக்கு மயிரிழை அளவுகூட மரியாதையும் பயமும் கிடையாது என்று கமல் பேசியிருப்பது யாரைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்பதை உணர முடிகிறதா?!