ஹிந்தியை இந்தியா முழுவதும் ஒரே மொழியாக கொண்டுவரவேண்டும் என அமித் ஷா கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் உருவாகின. நிலைமையை உணர்ந்து கொண்ட அமித் ஷா தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பின் வாங்கினார். பின்னர், அமெரிக்காவிலும், ஐநா சபை, சென்னை ஐஐடியில் பேசிய பிரதமர் மோடி தமிழில் யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்றெல்லாம் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். 

இப்படி பாஜகவினர் தமிழின் பெருமை பேசி வரும் நிலையில் ஹெச்.ராசா தமிழனின் பெருமையை பேச ஆரம்பித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கோர்வாட் கோயில் பற்றி அவர் சிலாகித்து வெளியிட்டுள்ள பதிவில், ’’உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றியபோது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் கட்டியுள்ளான்.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலில் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோமீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். அத்துடன் இதனை முழுமையாக ஒளி படமும் எடுக்க முடியும்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

 

அங்கோர்வாட் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதனை இதுவரை பாராட்டாத ஹெச்.ராஜா இப்போது புகழ்ந்து தள்ளுவதன் நோக்கம் தன் நிலையில் இருந்து மாறி பாஜக நிர்வாகிகளை போல தமிழ் மீது பற்றுக்கொண்டவராய் தன்னைக் காட்டிக் கொள்ளவே என கூறப்படுகிறது.