திமுகவை பரம்பரை விரோதி எனக் கருதிய 'சோ'வில் இருந்து, திமுகவை பரம எதிரியாகக் கருதிய ஜெயலலிதா வரை ஸ்டாலினை விமர்சிக்கவில்லை என்பது ஏன் என்பதை திமுக ஆதரவாளர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டான் அசோக் தனது முகநூல் பக்கத்தில், ’’நடப்பது ரிவர்ஸ் அரசியல். இப்படித்தான் இருக்கும். மு.க.ஸ்டாலின் நேற்று அரசியலுக்கு வந்தவரல்ல. தனது பதின் வயதுகளில் அரசியலுக்கு வந்தவர். ஏராளமான எதிரிகளைப் பார்த்துவிட்டார். பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்மீது எத்தனையோ வதந்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன. ஆனால், திமுகவை பரம்பரை விரோதி எனக் கருதிய 'சோ'வில் இருந்து, திமுகவை பரம எதிரியாகக் கருதிய ஜெயலலிதா வரை ஸ்டாலினை அரசியல் துவக்கத்தை, மிசா தியாகத்தை என்றுமே விமர்சித்ததில்லை, சீண்டியதுமில்லை.

 

காரணம் மிசாவின்போது ஸ்டாலின் பட்டபாட்டை அவர்கள் அறிந்திருந்தார்கள். என்னதான் கருணாநிதியின் மகனாக இருந்தாலும் ஸ்டாலினின் அரசியல் வாழ்வு என்பது சொகுசான பஞ்சணையில் அல்ல... மிசா சிறையில் தொழுநோயாளிகள் துடைத்துப் போட்ட ரத்தமும், சீலும் நிறைந்த பஞ்சுகளில் துவங்கியது என்பதை அவர்கள் மனதாரப் புரிந்திருந்தார்கள். மிசா சமயத்தில் அதை இந்தியாவில் எதிர்த்து நின்ற ஒரே தலைவர் ஒரே முதல்வர் கருணாநிதி என்பதையும், இந்தியாவில் அதை ஆதரித்து தீர்மானம் போட்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் என்பதையும், கருணாநிதி மகன் என்பதாலேயே ஸ்டாலின் எவ்வாறெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதையும் பலமுறை பல பதிவுகளில், நூல்களில் படித்திருப்போம்.

 

ஆனால், அமெரிக்கத் தூதரகம் அந்த சமயத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பிய செய்தியில், "பிரதமர் இந்திராவின் செயல்களுக்கு எதிராக முதல்வரின் மகன்ஸ்டாலின் சில வேலைகளைச் செய்ததால் கைது செய்யப்பட்டார். இந்திராவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தக் கைது குறைக்கும் என நம்பப்படுகிறது" என குறிப்பெழுதி இருப்பதை இந்த சர்ச்சையின் மூலம் இப்போது தெரியவந்துள்ளது. ஆயிரம் பேர் இதெற்கெதிராக முழங்கினாலும் இடியின் சத்தத்தை மங்கச் செய்திட முடியாது என்பதற்கு அந்தக் குறிப்பே சாட்சி.

புராணங்களில் தன்னை நிரூபிக்க வேண்டுமானால் நெருப்பில் இறங்கி நிரூபிக்க வேண்டும் என்பதை நாம் படித்திருக்கிறோம். ஆனால் திமுக என்றால் நெருப்பில் இறங்குவது மட்டுமல்ல, தான் இறங்கியது நெருப்புதான் என்பதையும் அடிக்கொருமுறை நிரூபித்து வந்திருக்கிறது.  ஊரறிய சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி தற்கொலை செய்துகொண்டார் என வரலாற்றைத் திருத்துகிறார்கள். தேச விரோதிகள் எல்லாம் தேசப்பற்றாளர் வேடத்தில் அலைகிறார்கள். 

ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இறந்தார் என்பது அந்த மாநிலத்தில் யாருக்குமே தெரியவில்லை. அக்‌ஷய் குமாரும், கங்கனா ரானவத்தும் பொருளாதார நிபுரணாக இருக்கிறார்கள். தமிழர்களின் கல்லறைகளில் கொள்ளை அடிப்பவர்கள் தமிழ்தேசிய வேடம் போட்டு அலைகிறார்கள். நடப்பது வலதுசாரி அரசியல். நடப்பது 'ரிவர்ஸ்' அரசியல். இப்படித்தான் இருக்கும். ஆனால், இப்படியே இருக்காது. எல்லாம் மாறும்’’என திமுக ஆதரவாளர் டான் அசோக் தெரிவித்துள்ளார்.