ஏர்செல் நிறுவனத்தை ஒழித்து ஓரம்கட்டிட கார்பரேட் நிறுவனங்களின் தலையீடு இருப்பதாக  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் திணறி வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, அரியனா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தன் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்திருந்தது. 

இதனால், கடந்த சில நாட்களாக, தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கிடைக்காமல் அவதிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்செல் நெட்வொர்க்கின் சிக்னல் முழுமையாக தடைபட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், ஏர்செல் கிளை நிறுவனஙகளை முற்றுகையிட்டனர். 

ஏர்செல் நெட்வொர்க் கிடைக்காத நிலையில், வேறு நொட்வொர்க் சேவைக்கு மாறத் தொடங்கினர். இந்த நிலையில், தன் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் விண்ணப்பத்தது.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தை ஒழித்து ஓரம்கட்டிட கார்பரேட் நிறுவனங்களின் தலையீடு இருப்பதாக  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலிட்டைக் கொண்டு வர, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் வெளியில் தெரியாமல் அமைதியாக ஆய்வுசெய்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.