ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளன.  மதுபானங்கள் கிடைக்காததால் ஷேவிங் லோசனை குளிபானத்தில் ஊற்றிக் குடித்தும், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டும் குடி வெறியர்கள் அசம்பாவிதங்களை தேடி வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

 

இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் அறிவிக்கப்பட்டிருந்த இந்த லாக்டவுன் மேலும் நீடிக்கப்படுமா, இல்லையா என்ற கேள்வி பொதுமக்களை விட குடிமகன்களை ஆட்டிப்படைக்கிறது. இந்தச்சூழலில் அதிக விலைக்காவது மது கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் மது பிரியர்கள் மன்றாடி வருகின்றனர். மதுவை விட முடியாதவர்களுக்கு மருத்துவமனையில் கவுன்சிலிங் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? அல்லது அதற்கு முன்கூட்டியே திறக்க வாய்ப்புள்ளதா என்றெல்லாம் மது பிரியர்களின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி மதுகடைகளின் நிலை குறித்து பேசினார். ’’தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது. ஊரடங்கு நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற முடிவு பிரதமரிடமும், முதல்வரிடமும்தான் உள்ளது’’ எனக் கூறினார். அமைச்சரின் இந்தப் பதிலால் மது வெறியர்கள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.