இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தில், காஷ்மீர் என்ற மாநிலம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்த வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர், ‘’காஷ்மீர் விவகாரத்தில் 70 சதவீதம் பாஜகவையும், 30 சதவீதம் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து பேசி வருகிறேன். இந்தியாவை புதை மணலில் பாஜக சிக்கவைத்து விட்டது. இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, காஷ்மீர் இருந்ததற்கான அடையாளம் இருக்காது.

 

தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தற்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதும் விழலுக்கு இறைத்த நீராக கடலில் சென்று கலந்துவிடும். கடந்த ஓராண்டு காலமாக முக்கொம்பு புதிய அணைப் பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்திய தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது மேட்டூரிலிந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி டெல்டா சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்திடுமாறு வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறினார்.