Do you know the value of DTV Dinakaran

ஊழல் புகார் சொல்பவர்கள், நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே எனவும் டிடிவி தினகரனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்தது எப்படி என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். 

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். 

தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். 

இதைதொடர்ந்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழல் குறித்து டிடிவி தினகரனும் கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், டிடிவி தினகரன் பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர், எதற்கெடுத்தாலும் கேமரா முன்னாடி நிற்பதே டிடிவி தினகரனுக்கு பேஷனாகி விட்டது என தெரிவித்தார். 

மேலும் ஊழல் புகார் சொல்பவர்கள், நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே எனவும் டிடிவி தினகரனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.