திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் கடன் சுமை ரூ.1 லட்சம் கோடி. இப்போது ரூ.7 லட்சம் கோடி. இதுதான் அதிமுக அரசின் ஒரே சாதனை. அரசின் வருமானம் இனி வட்டி கட்டுவதற்கே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழக அரசின் நிதிநிலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தாங்குமா என்பதே சந்தேகம்தான். நிதி பற்றாக்குறையால் அரசின் பல்வேறு துறை ஊழியர்களுக்கு தற்போது பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். உடனே அதை முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். அதேபோல, போன் செய்தால் குறைகள் தீர்க்கப்படும் என தொலைபேசி எண்ணை முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி சமீபகாலமாக முதல்வர் திசைமாறி பேசி வருகிறார். 7 பேரின் விடுதலையை திமுக தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருகிறது. எப்போதும் எதிர்த்ததில்லை.

 
தமிழக காவல் துறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள நிலையில், தமிழக டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் மனு அளித்திருப்பது கேவலமாக உள்ளது. சசிகலா வருகை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. திமுக தேர்தக் கூட்டணி குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும்” என்று துரைமுருகன் தெரிவித்தார்.