வேலூர் ஓட்டுகளை வாரி வழங்கிய மக்களுக்கு மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்ல பாண்டியன் நன்றியை வாரி வழங்கியிருக்கிறார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 28 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த 28 வேட்பாளர்களில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனும் ஒருவர். அவ்வப்போது அதிரடியாகக் கருத்து தெரிவிக்கும் செல்லப்பாண்டியன், மது தயாரிப்புக்காக நிலத்தடி தண்ணீரை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிட்டார்.
இன்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்த் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் செல்லப்பாண்டியன்  2530 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து செல்லப்பாண்டியன் அறிக்கை வெளியிட்டு, அதை சமூக ஊடகங்களில் உலவவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “2530 வாக்குகள் அள்ளித் தந்தற்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை பாதங்களில் சமர்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.


வேலூரில் ஏ.சி. சண்முகம் வெறும் 8,140 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதில் செல்லப்பாண்டியன் பிரித்த 2530 வாக்குகளும் திமுக வெற்றிக்கு உதவியது. எனவே, “ஏ.சி. சண்முகம் தோல்விக்கு நாங்களும் ஒரு காரணம்” என்று செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.