தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படாத நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி;- தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் திமுக எங்களை அழைக்கவில்லை. ஆனால் நாங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 3வது அணி என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. தேர்தல் விதிமுறையை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக கூறியிருப்பதில் நியாயமில்லை. எந்தத் தேர்தல் விதிமுறையும் மீறப்படவில்லை. பாஜக இப்படித்தான் செய்யும் என்றார்.

முன்னதாக தினேஷ் குண்டுராவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர்;- தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். அதைத் தாண்டி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஊகங்கள், வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.