வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்த இருப்பதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலினை மிரட்ட வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இட ஒதுக்கீடு செல்லாது
கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் அந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இட ஒதுக்கீடு போராட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாமகவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருந்தால் அது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்து இருக்கும். நாம் அனைவரும் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்திருப்போம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமது எதிர்பார்ப்புக்கு மாறாக வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு அல்ல என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு இது வருத்தப்பட வேண்டிய தீர்ப்பு இல்லை என்பதும் உண்மை தான். இன்னும் கேட்டால் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, ஒற்றை சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது சரியானது தான் என்பன உள்ளிட்ட உரிமைகளை இந்த வழக்கின் மூலம் வென்றெடுத்துக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தருந்தார். இந்தநிலையில் பாமக வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக பொருளாளரான திலக பாமா, உச்சநீதிமன்ற தீர்ப்பால், நாம் கொந்தளிப்புடன் உள்ளோம், அடுத்து போராட்டம் நடத்த உத்தரவுக்காக தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆட்சி சிறப்பு
இதனை தொடர்ந்து பேசிய ராமதாஸ், செயற்குழு கூட்டத்திற்கு பெண்கள் கடுகு அளவு தான் வந்திருக்கிறார்கள். கட்சிக்காக வேலை செய்யும் பெண்களை வீட்டில் விட்டு வந்து விட்டீர்கள். ஆனால் கடுகு சிறுத்தாளும் காரம் சிறக்காது என்பதை நான் அறிவேன், கட்சியில் சட்டத்தை திருத்த வேண்டும்.பெண்களுக்கு சமவாய்ப்பு கொடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். மேலும் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று நினைப்பதாக தெரிவித்தவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறினார்.எனவே போராட்டம் என்று சொல்லி முதல்வர் ஸ்டாலினை பயமுறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
