* புலி பதுங்குவது சீறி பாயத்தான். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகியுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்காமல் இன்னும் சிலர் உள்ளனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவர் இப்படி செய்துள்ளார்: கே.எஸ். அழகிரி. (அதிரடியா அடிச்சு தூக்கி அந்தர் பண்ணினால்தான் அரசியல். உங்க கட்சியின் வி.ஐ.பி.யை சுவரேறி குதிச்சு அரெஸ்ட் பண்ணினாங்க பாருங்க, அப்படியிருக்கணும் தலைமையோட முடிவு. அதைவிட்டுட்டு உங்க தலைவர் ராஜினாமா பண்ணி முன்னுதாரணமா இருக்கிறதெல்லாம் வசந்தமாளிகை காலத்துலேயே ஓல்டாகிப் போன செயல்.)

* தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே சினிமா டிக்கெட் எடுக்கும் நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும்: செல்லூர் ராஜு  (க்கும், நம்ம ஊர்காரர் சிவன், பெங்களூர்ல இஸ்ரோவுல உக்காந்துகிட்டு சந்திராயனை சந்திரனுக்கு அனுப்பிட்டு இருக்கிறாரு. ஆனா நாம ஆன்லைன்ல சினிமா டிக்கெட் எடுக்குறதை பெருமையா பேசிட்டு இருக்குறோம். வெளங்குமாண்ணே இந்த மண்ணு?)

* தமிழகத்துக்கும், தெலுங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்: தமிழிசை (அட நீங்க வேற ஏங்க மேடம். தமிழக பா.ஜ.க. தலைவராக உங்க கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் நடுவுல பாலமா செயல்பட்டு ரெண்டு எம்.பி. பதவியை ஜெயிக்க வைக்க முடியலை. இதுல தெலுங்கானாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவுல பாலம் இருந்தா என்ன? ஃப்ளைட் பறந்தா என்ன?)

* பழங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மன அழுத்தத்தை குறைக்கும். நீண்ட ஆயுள் தரும். அத்திப்பழம், விளாம்பழம், கொடுக்காப்புளி, இலந்தைப் பழம் இதையெல்லாம் குறைந்த செலவில் பயிரிட்டு, நிறைந்த லாபம் பார்க்கலாம்:ஓ.பன்னீர்செல்வம். (தலைவரே, கோயமுத்தூர் பக்கம் இயற்கை மருத்துவமனைக்கு நீங்க அடிக்கடி போகும்போதே நினைச்சோம், இப்படி பேசுவீங்கன்னு. இந்த துன்பம் பிடிச்ச துணைமுதல்வர் பதவியை தூக்கிப் போட்டுட்டு மம்பட்டிய எடுப்பே, வெவசாயத்துல வெளையாடலாம்.)

* மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள காவிரி நீர், கடைமடை பகுதிக்கும் சென்றடைந்துள்ளது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது:    துரைக்கண்ணு. (வெளங்கிடும்! விவசாய அமைச்சரா இருந்துக்கிட்டு இந்த விபரம் கூட புரியாம பேசுறீங்களே அண்ணே. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர், இருபது நாட்களாகியும் இன்னமும் கடைமடைக்கு வரலை. இந்த லட்சணத்துல நீங்களோ அது வந்து சேர்ந்துடுச்சு,  தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க!ன்னு அட்வைஸ் அள்ளி விடுறீங்க.)