Asianet News TamilAsianet News Tamil

செம தண்ணீ ஓடுது.. பாலாற்றை பாழாக்கி விடாதீர்.. ராமதாஸ் மன்றாடி கெஞ்சல்..!

 செங்கல்பட்டு பாலத்திலும், வாயலூர் தடுப்பணையிலும் தொடங்கி வாணியம்பாடி வரை பல இடங்களில் என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இளைஞர்களே.... ஆறு நிறைய தண்ணீர் போவதால் என்னைக் குத்திக் குதறி மணல் கொள்ளை அடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்களே.... கரைபுரண்டு ஓடுவதால் பாசனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நிம்மதி கொள்ளும் விவசாயிகளே.....
நான் தான் பாலாறு பேசுகிறேன்.

Do not spoil the  Palar River...  ramadoss request
Author
Tamil Nadu, First Published Nov 17, 2021, 11:45 AM IST

ஆறு நிறைய தண்ணீர் போவதால் என்னைக் குத்திக் குதறி மணல் கொள்ளை அடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்களே.... கரைபுரண்டு ஓடுவதால் பாசனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நிம்மதி கொள்ளும் விவசாயிகளே.....நான் தான் பாலாறு பேசுகிறேன் என்று ராமதாஸ் முகநூல் பதிவில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது முகநூல் பதிவில் நான் பாலாறு பேசுகிறேன்... என்னை பாழாறு ஆக்கிவிடாதீர்! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  செங்கல்பட்டு பாலத்திலும், வாயலூர் தடுப்பணையிலும் தொடங்கி வாணியம்பாடி வரை பல இடங்களில் என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இளைஞர்களே.... ஆறு நிறைய தண்ணீர் போவதால் என்னைக் குத்திக் குதறி மணல் கொள்ளை அடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்களே.... கரைபுரண்டு ஓடுவதால் பாசனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நிம்மதி கொள்ளும் விவசாயிகளே.....நான் தான் பாலாறு பேசுகிறேன்.

Do not spoil the  Palar River...  ramadoss request

பாலைப் போன்ற வெண்மையுடனும், தூய்மையுடனும்  நான் கரை புரண்டு ஓடுவதால் தான் எனக்கு பாலாறு என்று பெயர் வந்தது. நீங்கள் என்னை உற்றுப் பார்த்து அதை உணர்ந்து கொள்ளுங்கள். உண்மையில் உங்களின் வரவேற்பும், கொண்டாட்டங்களும் எனக்குப் பிடிக்கவில்லை. தங்களின்  உடைமையை பாதுகாத்து வைத்துக் கொள்ளத் தெரியாமல் தொலைத்து விட்டு, அது மீண்டும் கிடைத்தவுடன் மகிழ்வதற்கு ஒப்பானது தான் இப்போது என்னைக் காண்பதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சியும். நீங்கள் நினைத்திருந்தால், பொறுப்புடன் இருந்திருந்தால், இன்றையக் காட்சிகள் அதிசயமாக இருந்திருக்காது; நிரந்தரமானதாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் போனதற்கு காரணம் நீங்கள் தான்.

கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து குறிஞ்சி நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலரை பார்த்து மகிழக்கூடும். ஆனால், கடந்த இரு தலைமுறைகளில் வட தமிழகத்தில் பிறந்த இளைஞர்களும், இளம்பெண்களும் என்னைப் பார்ப்பதே மிகவும் அரிது... எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை என்னை நீங்கள் பார்க்க முடியும் என்பது யாருக்கும் தெரியாது. தொடக்கத்தில் எனக்கு இவ்வளவு வரவேற்புகள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் முதன்முதலில் நான் கரைபுரண்டு வரும் போது பலரும் என்னை வழிபடுவார்கள். அத்துடன் சரி... மற்ற நேரங்களில் நான் சாதாரண ஆறு தான். என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அண்டை மாநிலங்கள் என்னைத் தடுத்து வைத்துக் கொண்ட பிறகு நான் தமிழ்நாட்டுக்கு வருவது அரிதாகிப் போனதால் தான் எனக்கு இப்போது உங்களிடம் தனி மரியாதை கிடைத்திருக்கிறது.

Do not spoil the  Palar River...  ramadoss request

உண்மையில் உங்களைப் பொறுத்தவரை நான் காட்சிப் பொருள் தான். உங்களுக்கு எனது அருமை தெரியவில்லை. அதனால் தான் என்னை பாதுகாக்க வேண்டும்; பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. ஆந்திர மாநிலத்தவருக்கும், கர்நாடகத்தவருக்கும் எனது அருமை புரிந்திருக்கிறது. அதனால் தான் என்னை ஆங்காங்கே தடுத்து அணை கட்டி, அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டார்கள். கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் நான், காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறேன். 93 கிலோமீட்டர் பாயும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 14 ஏரிகளும் கட்டப்பட்டு மொத்தம் 17 இடங்களில் என்னை சேமிக்கிறார்கள்.  33 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 22 தடுப்பணைகளைக் கட்டி என்னை தடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் பாய்கிறேன். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை நான் செழுமைப்படுத்துகிறேன். ஆனால்,  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகில் 1858 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் என்னை மறித்து கட்டப்பட்ட ஒரே தடுப்பணை தான் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

Do not spoil the  Palar River...  ramadoss request

இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில் என்னைத் தடுத்து வைக்கவும், தண்ணீரை சேமித்து வைக்கவும்  ஒரே ஒரு தடுப்பணை கூட கட்டப்படவில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்லித் தான் உங்களைத் திட்டத் தோன்றுகிறது. என்னமோ போங்கடா கண்ணுங்களா...பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழ்நாட்டில் என்னைப் பற்றி சளைக்காமல் பேசிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி. அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து என்னைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். அவரது வழிகாட்டுதலில் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் எனக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார். ‘‘ பாலாற்றின் குறுக்கே 5 கி.மீக்கு  ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்’’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அரசாங்கமும் அதையேற்று தடுப்பணைகளை கட்டுவதாக சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.... ஆனால், சொன்னதை செய்யவில்லை.

ஆந்திரத்தில் நான் சிறைபிடிக்கப்பட்டதை எதிர்த்து போராடியவர்களும் பா.ம.க.வினர் தான். ஒருமுறை  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் உள்ள கணேசபுரம் என்ற இடத்தில் என்னை மறித்து தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. அதற்கான பூமிபூஜையை ரகசியமாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். இதை தெரிந்து கொண்ட ஜி.கே.மணி தலைமையிலான பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வாணியம்பாடி வழியாக எல்லையைக் கடந்து ஆந்திராவுக்குள் நுழைந்து போராட்டம் செய்தது. அத்துடன் கணேசபுரத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. அதனால் எனக்கான பல சிறைகளில் ஒன்று கட்டப்படுவதற்கு முன்பாகவே பா.ம.கவால் தகர்க்கப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டில் என்னை மறித்துக் கட்டப்பட்ட இரண்டாவது தடுப்பணை செங்கல்பட்டை அடுத்த பாலூருக்கு அருகில் உள்ளது. இது 2014-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது நீர் செறிவூட்டுவதற்கான அணை என்பதால் மிகவும் பெரிதாக இருக்காது. 

Do not spoil the  Palar River...  ramadoss request

மூன்றாவது தடுப்பணை இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில்  வாயலூருக்கும், கடலூருக்கும் இடையே 1200 மீட்டர் நீளத்திற்கு 5 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.  நான் கடலில் கலப்பதற்கு சில கிலோமீட்டர் முன்பாக இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள் இந்த அணையை கட்டியுள்ளனர். கல்பாக்கம் அணுமின்நிலையம் அதன் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கிய ரூ.32.50 கோடியில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட ராசியோ என்னவோ இப்போதெல்லாம் நான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு  வருகிறேன். ஆந்திராவில் எவ்வளவு தடுப்பணை கட்டப்பட்டிருந்தாலும் அதை மீறி நான் தமிழகத்திற்கு வந்து உங்களுக்கு தரிசனம் தருகிறேன். இப்போதும் கூட, வாயலூர் தடுப்பணையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு  இரு கரைகளையும் தழுவிக் கொண்டு கடல் போல நான் காட்சியளிக்கிறேன்.

என் மீதான நான்காவது தடுப்பணை செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லிபுரம் &- ஈசூர் இடையே ரூ.30.90 கோடியில்  2019-ஆம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இப்போது எனது பிரம்மாண்டத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் நான்கு தடுப்பணைகள் போதுமானதாக இல்லை. அண்மையில் பெய்த மழையில் நான் பொங்கிப் பிரவாகம் எடுத்தேன். சில நாட்களுக்கு முன்புவரை வாயலூர் அணையிலிருந்து வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி வீதம் ஓடிச் சென்று கடலில் கலந்தேன். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 3 டி.எம்.சி தண்ணீரை நீங்கள் வீணடித்து இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல... கடந்த 10 ஆண்டுகளில் 200 டி.எம்.சிக்கும் கூடுதலான எனது நீரை  நீங்கள் கடலுக்கு தாரை வார்த்திருக்கிறீர்கள்.

Do not spoil the  Palar River...  ramadoss request

உங்களையெல்லாம் எந்த பாலைவனத்தில் தள்ளுவது? மருத்துவர் அய்யா கூறுவதைப் போல என்னை மறித்து 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால், அதில் சேமிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சுமார் 2 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்யலாம்;  சென்னைக்கு குடிநீர் வழங்கலாம்; நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். ஆனால்,  நீங்கள் எதையும் செய்ய மாட்டீர்கள். தடுப்பணை கட்டும்படி அரசுக்கு நெருக்கடியும் தரமாட்டீர்கள். நான் கரைபுரண்டு ஓடும் போது  செல்பி மட்டும் எடுத்துக் கொள்வீர்கள். இவ்வளவுக்குப் பிறகும் நான் உங்களுக்கு நன்மை செய்வதைப் பார்த்து, வான்மழை மூலம் என்னை உருவாக்கும் கருமேகங்கள் என்னை பார்த்து கிண்டலாக கைக்கொட்டி சிரித்து விட்டு கரைந்து செல்கின்றன. என்னவோ போங்க வட தமிழ்நாட்டு மக்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாறு எப்போது வற்றியே காணப்படும். அளவுக்கு மீறி மணல் அள்ளுவதே காரணம் என்று கூறப்பட்டு வந்தது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என ராமதாஸ் சீமான் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், ராமதாஸ் பாலாறை பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios