இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி இல்லை என்று சொல்லி, திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த விசயங்களை பட்டியலிட்டு விட்டு, கடைசியில் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள்  என சமீபத்தில் பேசினார் மு.க.ஸ்டாலின். இந்து மக்களாகிய தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சி திமுக என்று ஒருபக்கம் சொல்லி விட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என்று பாஜகவை எச்சரித்து இருக்கிறார்.

 சமீபமாக தமிழக இந்து மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் பேசுகின்றனர். ஆனால், இது போன்று பேச வேண்டிய அவசியம் இதற்கு முன்பு திமுகவுக்கு இருந்ததில்லை. இபப்டி பேசுவது எதிர்காலத்தில் திமுகவுக்கு சாதகம் தானா? அல்லது பாஜகவுக்கு சாதகமா? என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் இதுகுறித்து திமுக தலைமை புதிய உத்தரவு ஒன்றை உடன்பிறப்புகளுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும், 1,500 பிரசார கூட்டங்களை, தி.மு.க., நடத்த உள்ளது. கட்சியின் பிரபலங்கள் பங்கேற்கும் பிரசாரத்தில், ‛இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பேச கூடாது. அவமதிக்கும் செயலில் ஈடுபட கூடாது' என கட்சி மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அத்துடன், இந்துக்கள் அதிகமுள்ள இடங்களில், தி.மு.க.,வோ, அதன் தலைவர்களோ, இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை கடந்தகால நிகழ்வை சுட்டிக்காட்டி பேசவும் உத்தரவு போட்டிருக்கிறார்கள்.