ஊரடங்கை காரணம் காட்டி இ -பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசை தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு முறையாக எடுக்காமல் வெற்றி நம்பிக்கையை ஊட்டி மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நட்டாற்றில் தவிக்கவிட்டு உள்ளார். அதிமுக அரசு நிர்வாக தோல்வியானது தமிழகத்தை கொரொனா நோய் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக மாற்றி தமிழகத்திற்கு அவப்பெயரையும், தமிழக மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடித்தந்து விட்டது.
 
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மக்களை இ -பாஸ் முறையில் அரசு தடுத்து வருகிறது. ஊழல் தலைவிரித்தாடும் இ- பாஸ் முறையை ரத்து செய்யாமல் மக்களை முடக்கி போட்டுள்ளனர். மக்களின் நலன் கருதி பிரதான எதிர்க்கட்சியின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்’’என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.