தற்போதைக்கு பொதுக்கூட்டங்கள் எதிலும் தான் பேசப்போவதில்லை என்கிற முடிவில் சீமான் உறுதியாக உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.    நிபந்தனை ஜாமீனில் தற்போது சீமான் மதுரையில் தங்கியுள்ளார். தினமு காவல் நிலையம் சென்று சீமான் கையெழுத்திட்டு வருகிறார். செய்தியாளர்களை சந்திப்பதை கூட சீமான் தவிர்த்து வருகிறார். இதற்கு காரணம் எப்படியாவது சீமானை பிடித்து சிறையில் தள்ளிவிட வேண்டும் என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது தான். மீண்டும் ஏதேனும் எசகுப்பிசகாக பேசி காவல்துறையிடம் சிக்கி சிறைக்கு செல்ல சீமான் தயாராக இல்லை.எனவே தான் மதுரையில் கூட இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார் சீமான். கடந்த வாரம் வார இதழ் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியை பார்த்த பல்வேறு வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் சீமானை பேட்டி எடுக்க தொடர்பு கொண்டன. ஆனால் தற்போதைக்கு பேட்டி எதுவும் வேண்டாம் என்று சீமான் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியினர் இருந்துள்ளனர். ஆனால் கூட்டத்தை பார்த்த உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் பேசிவிட்டால் வம்பாகிவிடும். எனவே தற்போதைக்கு பொதுக்கூட்டமும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் சீமான் சொல்லவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை எப்படியாவது வெளியே கொண்டு வரும் வேலையை மட்டும் பார்க்குமாறு மூத்த நிர்வாகிகளிடம் சீமான் கூறியுள்ளார்.