மொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க் கட்சிகளுக்கு பாஜக மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்க பின்னரே, தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மொழியைப் படிப்பது குழந்தைகளுக்கு நன்மைதான். பெரும்பாலான பெற்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை விரும்புகின்றனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக முதல்வரின் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது.

பாஜக எந்த மொழியையும் திணிக்கவில்லை. மூன்றாவது மொழி கற்க வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்றுத்தரப்படுகிறது. அவர்களது பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.