சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனக்கு எந்தவிதமான வசதிகளையும் செய்து தரவில்லை என தமிழக அரசு மீது சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பகிரங்க குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றம் உத்தரவிட்டதை தமிழக அரசு தட்டிக்கழிப்பதாக பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.  எனக்கு அளிக்க உத்தரவிட்ட வசதிகளில் ஒரு சதவிகித வசதியை மட்டுமே தமிழக அரசு செய்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கவில்லை. டி.எஸ்.பி பன்னீர்செலவம்ன் ஆவணங்களை ஒப்படைக்க மறுக்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த உதவியையும் தமிழக அரசு செய்து தரவில்லை’ என புகார் அளித்தார். 

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், காவல்துறையையும், தமிழக அரசையும் கடுமையாக எச்சரித்தனர். ’’உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல் தடுப்பது எது? குற்றப்பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறியவே பொறுமையாக இருக்கிறோம்.

 உயர்நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுகளை அவமதிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாதா? சில காரணங்களுக்காக பொறுமையாக இருக்கிறோம். பொறுமை காப்பதால் உத்தரவுகளை தட்டிக்கழிக்கலாம் என அர்த்தம் கொள்ளக்கூடாது. பொன் மாணிக்கவேல் புகாருக்கு ஜனவரி 24ம் தேதிக்குள் பதில்தர வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.