இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் 3-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் ஜெயக்குமார்  இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் 1 லட்சம் வருமானம் ஈட்டலாம் என்று கூறியுள்ளார். 

பின்னர், சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு,  ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர் மீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கேன்சர், கண் பார்வை கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது என தெரிவித்துள்ளார்.