தமிழக முதலமைச்சர் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள், அவர்களின் துறைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், அந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, முதல்வர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். ஆரோக்கியமான அரசியலை உருவாக்கங்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. ஆதாயத்துக்காக கட்சி தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று நீதிபதி சதீஷ்குமார் அறிவுரை வழங்கினார். 

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேலும் 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.ஏற்கனவே 4 வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.