பாஜகவின் B-Team அரசியலை பீகாரில் செய்யுங்கள்.. இங்க வேண்டாம்.. சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா எச்சரிக்கை..!
சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட மதிப்பிற்குரிய ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ.க. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பா.ஜ.க.வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணை போக வேண்டாம் என ராம் விலாஸ் பாஸ்வான் மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என ஆ.ராசா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில்;- முற்போக்கு அரசுகள் அமைந்தாலும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழமைவாதத்தாலும் புரட்டுகளாலும் போதிய கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்றத்தை, மண்டல் எழுச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என இன்னுமும் சில பிற்போக்குச் சக்திகள் முயன்று வருகின்றன. இதனால், வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை தேடியும் புதுவாழ்வு தேடியும் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பணிபுரியும் அவர்களது நிம்மதியையும் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க. செய்வதும், அதற்கு மறைந்த மதிப்பிற்குரிய ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களது மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக எங்கெங்கோ நடந்த குற்றங்களையெல்லாம், தமிழ்நாட்டில் நடந்ததென போலியான செய்திகளைப் பரப்பி, அதன்மூலம் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிக் குளிர்காயலாம் என நினைத்த பா.ஜ.க.வின் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. பீகாரில் இருந்து தமிழ்நாடு வந்த அரசுக்குழுவும் இங்கு பணிபுரியும் வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பதை நேரில் கண்டு உறுதிசெய்திருக்கிறது.
போலிச் செய்தியை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீது, தமிழ்நாடு காவல்துறையும் பீகார் மாநிலக் காவல்துறையும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தாங்கள் காலம் காலமாகச் செய்துவந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பாஸ்வான் அவர்களைத் துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள். எதிர்வரும் நாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான 'திராவிட நாயகன்' மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாகத் தனது 70-ஆவது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்தப் பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள்.
எனவே, சிராக் பாஸ்வான் அவர்களை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பா.ஜ.க.வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணை போக வேண்டாம் என மதிப்பிற்குரிய ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களது மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட மதிப்பிற்குரிய ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ.க. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை யார் ஒருவரும் காலத்தே உணர வேண்டும்.
எனவே, சிராக் பாஸ்வான் அவர்களுக்குக் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பா.ஜ.க.வுக்கான B-Team அரசியலை அவர் பீகாரிலேயே செய்யட்டும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம். எங்கள் கழகத் தலைவர் முன்வைக்கும் திராவிட மாடல் வழியாக 2024-இல் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற - முற்போக்குச் சக்திகளின் அரசு அமையும். வடமாநிலங்களில் பரவி வரும் பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய சிந்தனையும், அது அம்மாநிலத்தில் வாழும் நமது சகோதர - சகோதரிகளிடையே ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. அப்போது பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சேர்ந்தே விடியும்! அந்த விடியலில் பொய்களும் பொய்களுக்குத் துணைப் போகும் போலிகளும் மக்களால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என ஆ.ராசா கூறியுள்ளார்.