DMKs magistrate Kathuvakula four news

தட்டையான பாதையை விட மேடு, பள்ளமான வழிகள் சுவாரஸ்யமானவை. செய்திகளும் அப்படித்தான்! நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வதை விட அனுமானங்கள், புதிர்கள், ரகசியங்கள், நடந்துவிட வாய்ப்புள்ளவை, நடந்து வெளியே தெரியாதவை ஆகியவையும் செய்திகளே.

அப்படி பரபரப்பு மசாலா தூவப்பட்ட செய்திகள் இதோ உங்களுக்காக...

# எடப்பாடி அணி தங்களை மிக கடுமையாக ஒதுக்கி வைக்கிறது! இதை கவனித்துக் கொண்டிருந்தாலும் கூட தங்களின் உரிமையை காப்பாற்றுவதற்காக எந்த காரியத்தையும் செய்யமாட்டேன் என்கிறார் பன்னீர்: என அவரது ஆதரவாளர்கள் புலம்பிக் கொட்டுகின்றனர். இவர்களில் பலர் கூண்டோடு தினகரன் பக்கம் தாவும் சூழல் உருவாகலாம்.

# கைதாகியிருக்கும் கோவை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கணபதி, பைபாஸ் ரூட்டில் தனக்கு வரும் பணத்தை உடனடியாக திருச்சியிலுள்ள ஒரு இடத்துக்கு அனுப்பி பாதுகாத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். அந்த இடத்தை கண்டுபிடிக்கத்தான் மண்டையை உடைக்கிறது வருமான வரித்துறை.

# மணிரத்னம் படத்திலிருந்து பகத் பாசில் விலகுவதற்கு கால்சீட் பிரச்னை மட்டும் காரணமில்லை, அதையும் தாண்டி சில திரைமறைவு சிக்கல்கள் இருக்கிறது என்கிறார்கள்.

# பாலிவுட் படமான ‘அய்யாரி’, இந்திய ராணுவத்தில் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறதாம். எனவே இது ரிலீஸ் ஆவதில் செம சிக்கல்கள் எழலாம் என்கிறார்கள்.

# கோயமுத்தூரை சேர்ந்த கல்யாண மன்னன் புருஷோத்தமன் மீது வழக்கு பதிவாக, அவர் தலைமறைவானார். அப்போதும் கூட தலைமறைவாய் இருந்தபடி இரண்டு பெண்களை மோசடியாய் திருமணம் செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தாராம்.

# பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தன்னை நம்ப வைத்து பின் கழுத்தறுத்துவிட்டார்கள் என்று புலம்புகிறார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் சின்னசாமி.

# திருநாவுக்கரசரின் நெருக்கமான நபரான குட்லக் ராஜேந்திரன் என்பவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியை கோரி ராகுலுக்கு கடிதம் அனுப்பினாராம் அரசர். ஆனால் அந்த ராஜேந்திரன் மீது சி.பி.ஐ.யின் வழக்குகள் இருப்பதை இளங்கோவன் டீம் ஸ்மெல் செய்து ஆதாரங்களை டெல்லிக்கு அனுப்பி அரசரின் முயற்சிக்கு செக் வைத்துள்ளனர்.

# பிரதமர் நேரம் தராமல் இழுத்தடிப்பதாலேயே சென்னையில் நடத்தப்பட வேண்டிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தள்ளிப்போகிறது என கோட்டையில் புலம்பல் அதிகமாகியுள்ளது.

# ராமஜெயம் கொலை வழக்கை கையிலெடுத்திருக்கும் சிபிஐ விரைவில் கே.என். நேருவை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்ப தயாராகி வருகிறதாம்.

# மீனாட்சியம்மன் கோயில் தீ சம்பவத்துக்குப் பிறகு இந்து அமைப்புகள் ஒன்று கூடி ஹெச்.ராஜா தலைமையில் ஓர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இவர்கள் தமிழக அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை ஆதாரத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும் முடிவில் இறங்கியுள்ளனர்.