திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு இளைரணி செயலாளர் பதவிலிருந்து விலகினார். இதனையடுத்து அந்தப் பொறுப்புக்கு முன்னாள் அமைச்சரவான வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.
இதனையடுத்து திமுகவில் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் நடந்த திமுகவினர் கூட்டங்களில் இதற்காகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. உதயநிதி அந்தப் பொறுப்பை ஏற்க வசதியாக அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

   
இந்நிலையில், ''திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை'' என, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கட்சி பதவியிலிருந்து விலகுவதாக தலைமைக்குக் கடிதம் எதுவும் தரவில்லை. கட்சி தலைமை யாருக்கும் எந்தப் பதவியையும் வழங்கலாம். அதில் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். இதில், ராஜினாமா என்ற பேச்சே எழவில்லை” என்று தெரிவித்தார்.