சென்னையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. ராயப்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சில மணி நேரம் பெய்த கன மழைக்கே சென்னை தாங்கவில்லை. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கின. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்தனர். வட கிழக்கு தொடங்கிய ஒரே நாளில் சென்னையைக் கதி கலங்க வைத்த மழையால் சென்னைவாசிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
சென்னையைக் காப்பாற்ற பேரிடர் துறையை அழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வீடு - சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும் , அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.


2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள்  பாடம் கற்கவில்லை. மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே.” என்று பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.